Wednesday, November 21, 2018

கஜா என்ற ஆசிரியரும், அவர் காலத்தே கற்றுக்கொடுத்த பாடமும்!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களையும், அவர்களுக்கு கிடைக்கும் உதவிகளையும் கொச்சைப்படுத்தும் எண்ணத்தில் இதை எழுதவில்லை.

மழை மறைவு பிரதேசமான தமிழகத்திற்கு, வட கிழக்குப் பருவமழை என்பது ஒரு வரம். இயற்கையாக அமைந்த இந்த நிகழ்வில், சமயங்களில்  குறைந்த மழையையும், சமயங்களில் புயல் போன்ற காரணங்களால் பெரு மழையையும் பெறுகிறோம். காலங்காலமாக நடந்து வரும் இந்த இயற்கை நிகழ்வை, தற்காலத்தில் தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு முன்கூட்டியே கணிக்க முடிகிறது. ஏன், உருவாகும் புயல்களுக்கு பெயர்வைத்துப் பார்க்கும் அளவுக்கு நேரம் இருக்கிறது. 1968-ம் ஆண்டு வெளிவந்த தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தில் ஒரு காட்சியில் நாகேஷ் இப்படி சொல்லுவதாக ஒரு காட்சி வரும் "நாகப்பட்டிணத்துல புயல் வருதா? அதுதான் வருசா வருஷம் வருதே. அதுக்கென்ன".

தமிழக கிழக்குக் கடற்கரை, குறிப்பாக காவேரி டெல்டா பகுதியை புயல் தாக்குவது அரிதான நிகழ்வு அல்ல. இந்த வருடம் கஜா புயல். அடுத்த ஆண்டு? இந்த நிலையில், அப்பகுதி மக்கள் இத்தகைய கடினமான இயற்கை சூழலை எதிர்கொள்ள சுயமாகவோ அல்லது அரசாங்கத்தாலோ பயிற்றுவிக்கப்பட்டு உள்ளதாக தெரியவில்லை.

ஏன் ஆடு, மாடுகள் மரம் விழுந்து செத்துக்கிடக்கிறன? சுனாமி மாதிரியான திடீர் இயற்கைப்பேரிடர் இல்லை இந்தப் புயல். கிட்டத்தட்ட ஒருவாரத்திற்கு முன்பே கணிக்கப்பட்டு மக்களிடம் அரசு, பொது மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக புயல் எச்சரிக்கை தொடர்பான தகவல்கள் கொண்டு சேர்க்கப்பட்டுவிட்டன. இருப்பினும் அவர்களால் தங்கள் வாழ்வாதரமான ஆடு, மாடுகளைக்கூட பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க முடியவில்லை என்பது வருத்தமாக உள்ளது. கால்நடைகளை இயற்கைப் பேரிடரின் போது பாதுகாக்கத் தேவையான இட அமைப்பு இல்லாமல் இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஒவ்வொரு கிராம மக்களும் குறைந்த பட்சம் இரண்டு நாட்களுக்கு முன்பு ஒன்று கூடி புயல் தொடர்பான தகவல்களை பொது வெளியில் விவாதித்து உடனடியாக நடவடிக்கைகளை தொடங்கியிருக்க வேண்டும். குறைந்த பட்சம், தேவையான உணவுப் பொருட்களை சேமித்தல் (எறும்புகள் செய்வதைப் போல), நீர் தேக்கத் தொட்டியில் முழு கொள்ளளவுக்கு நீரை நிரப்பி வைத்துக் கொள்ளுதல், முடிந்த வகைகளில் குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுதல், கால்நடைகளை ஒன்றாக ஒரு பாதுகாப்பான இடத்தில் அடைத்து வைத்தல் என இன்னும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை எடுக்க நிறைய நேரம் இருந்தது. கும்பல் மனப்பான்மையை எளிதில் அடையும் நமக்கு ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு குழுவாக இணைவது அவ்வளவு எளிமையாகக் கைகூடுவது இல்லை.

புயலுக்குப் பின், தற்போது கிடைக்கும் உதவி பாராட்டத்தக்கதாக இருந்தாலும் கூட அது யானைப் பசிக்கு சோளப்பொரி தான். மக்களின் ஆக்கப்பூர்வமான முன்னெச்சரிக்கை செயல்பாடுகள் தான் சிறப்பாக உதவக் கூடியனவையே தவிர, அரசோ அல்லது பிறரோ தரும் புயலுக்கு முன் மற்றும் பின்னான தற்காலிக உதவிகள் அல்ல என்று நினைக்கிறேன்.

அரசாங்கம் என்ற இந்த அமைப்புகள் எல்லாம் உருவாவதற்கு முன், நம் பிரச்சனைகளை நாம் தானே கவனித்துக் கொண்டோம்? இங்கு புதிதாக சிந்தித்து செயல்பட பெரிதாக ஒன்றும் இல்லை. காலம் காலமாக நாம் எப்படி நமக்காக இணைந்து செயல்பட்டோமோ, அந்த உணர்வை மறு ஆக்கம் செய்து நடைமுறைப்படுத்தினால் போதும். அதற்கான காரணமும், அவசியமும் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இப்போது ஏற்பட்டு இருக்கிறது.

இயற்கை பேரிடருக்குப் பின்பு கும்பலாக சேர்ந்து அரசைக் குறைகூறுவதால் பெரிதாக ஒன்றும் மாறிவிடாது. இத்தகைய பெரும் இயற்கை இடர்பாடுகளை எதிர்கொண்டு குறுகிய காலத்தில் மீள் உருவாக்கம் செய்யம் அளவிற்கு நம் அரசாங்கங்களிடம் தொழில் நுட்பமும், வசதியும் இல்லை என்பதை உணர வேண்டும். முதலில் நாம் ஒன்றிணைத்து குழுவாக இயங்கி முடிந்த வரைக்கும் சேதாரங்களைக் குறைக்கப் பாடுபடவேண்டும். பின் அரசாங்கம் வந்து அவர்களின் வேலையை செய்யும்.

பொது வழிச் சாலைகளை மறிக்கலாம். அதிகாரிகளையும், மக்கள் பிரதிநிதிகளையும் திட்டித் திருப்பி அனுப்பலாம். அங்கே அடித்து உடைக்கப்பட்ட இன்னோவா கார் அமைச்சரின் சொந்தக் கார் அல்ல. அது பொது சொத்து. நம் சொத்து. இந்த உணர்வு ஏற்படும் நாள் தான் நம் நாள்.

பி.கு: இது என் சொந்த கருத்து. இதற்கான மறுப்பு மற்றும் எதிர்வினைகளை பின்னூட்டமிடவும். தவறு இருப்பின் திருத்திக் கொள்கிறேன்.

நன்றி!
தினேஷ் ராஜு