தனிமனிதர்களை முன்னிறுத்தி நடத்தப்படும் அரசியல் ஜனநாஜயகத்திற்கு உகத்ததென படவில்லை. இது போன்ற முன்னிறுத்தல்கள், ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஓட்டுப்போடுவது மட்டுமே தங்களின் கடமை பின் நடக்கப்போகும் பிற அனைத்தையும் அவர் பார்த்துக்கொள்வார் என்றும், அவர் என் இனத்தின், மதத்தின், சாதியின், மொழியின் தலைவர் எனவும், அவர் நிர்வாகத்தில் தோற்பதும், சொதப்புவதும், ஜனநாயக அமைப்பின் குறை எனவும், சமரச போக்கினை கடைபிடிக்க முற்படும் போது அவரை திராணியற்றவர் எனவும் பெரும்பான்மை மக்களை நம்ப வைக்கின்றது.
இதன் விளைவாகத்தான் இன்று “நான் தான் உங்களின் காவலன், என்னிடத்தில் சமரசத்திற்கு எல்லாம் வேலையே இல்லை” என்றும், “எனக்கு எல்லாம் தெரியும் நீ மொதல்ல ஓட்டுப்போடு, உனக்கு என்ன செய்யணும்கிறத நான் பார்த்துக்கொள்கிறேன்” என்றும் பேசும் தலைவர்கள் வலுப்பெறுவதையும் பார்கின்றேன்.
மக்களுடன் உரையாடுவதை தவிர்த்து, அவர்களின் பிரச்சனைகளின் வேரினை அறியாமல் பீடத்தில் அமர்ந்து கொண்டு அவர்களை சதா வழி நடத்தவிரும்பும் ஆதிக்கவாத தலைவர்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றோம்.
ஜனநாயகத்தின் முக்கிய விழுமியங்களான சமரசம், சகிப்புத்தன்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் அகிம்சை போன்றவை தனது மதிப்பினை இழந்து வருகின்றன. விழுமியங்களை இழந்து வரும் ஒரு சித்தாந்தம் அதன் உண்மையான பாதையில் இருந்து விலகி தன்னைத்தான அழித்துக்கொள்ளும் பாதையை நோக்கி நகர்கின்றது.