''வண்டி ஓட்டத் தெரியாத பெண்கள் இல்லை!''
பெருமாள் முருகன்... மண் மணக்கும் எழுத்துக் காரர். 'காலச்சுவடு’ இலக்கிய இதழ் ஆசிரியர் குழுவில் அங்கம் வகிப்பவர். நாமக்கல், அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியர். நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
___________________________________________________________________________________________________________________
'கொடிமாடச் செங்குன்று’ என்று பக்தி இலக்கியங்கள் குறிப்பிடும் கூட்டப்பள்ளி கிராமம்தான் என் சொந்த ஊர். இது திருச்செங்கோட்டை ஒட்டி இருக்கிறது. இன்று அது நக ரம் ஆகிவிட்டது. அர்த்தநாரீஸ்வரர், செங் கோட்டு வேலவர் ஆகிய கடவுள்கள் குடி கொண்டு இருக்கும் செந்நிற மலை திருச்செங் கோடு. மலை ஏற முடியாதவர்களுக்காக கீழே நிலத்தமர்ந்தான் கோயில் என்று சொல்லப்படும் கைலாசநாதர் கோயிலும் உண்டு.
கோயிலால் ஊர் அறியப்பட்டாலும், ஊரின் வளர்ச்சிக்குக் காரணம் தொழில் வளமும் மக்களின் கடின உழைப்புமே!
ரிக் வண்டித் தொழில் (போர்வெல் போடு வது), லாரி, விசைத்தறி எனக் குறுகிய காலத்தில் விஸ்வரூபம் எடுத்து, நாடு முழுவதும் அறியப் படும் நகரமாகிவிட்டது என் ஊர். போர்வெல் போடுவதற்காகச் செல்லும் ஆண்கள் மாதக் கணக்கில் வீட்டுப் பக்கம் எட்டிப் பார்க்க மாட் டார்கள். அதனால், குடும்பத்தைத் தனியாகவே நடத்தும் அளவுக்கு உரம் பெற்றவர்கள் இங்கு இருக்கும் பெண்கள். இரு சக்கர வாகனம் ஓட் டத் தெரியாத பெண்களே இங்கு கிடையாது. ஏன்? கன்டெய்னர் லாரி ஓட்டும் பெண்கள்கூட இங்கு உண்டு. தரமான கல்வி வழங்குவதில் இன்று தமிழகத்திலேயே முன்னிலையில் இருக்கிறது திருச்செங்கோடு. இங்கு இருக்கும் தனியார் கல்வி நிறுவனங்களில் வெளியூர்களில் இருந்து வரும் லட்சக்கணக்கான மாணவர்கள் தங்கிப் படிக்கிறார்கள். மாநில அளவிலான மதிப்பெண்களில் முதல் பத்து இடங்களில் ஐந்தைத் தட்டிச் செல்வதும் இவர்களே!
பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது செவ்வாய் சந்தை. இன்று நகரின் வளர்ச்சி, சந்தையை முடக்கிவிட்டது. ஆனாலும், ஆட்டுச் சந்தையின் மவுசு மட்டும் மறையவில்லை. திங்கள் கிழமை மாலையில் இருந்தே ஆட்டு வியாபாரிகள் ஆடுகளை ஓட்டிக்கொண்டு வந்து விடுவார்கள். செவ்வாய்ப் பொழுது சாயும் வரை ஆடுகளின் 'ம்மேமே’ சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். மறுநாள் விடியற்காலை சுற்றுவட்டார விவசாயிகள் அங்கு குவிந்துகிடக்கும் ஆட்டுப் புழுக்கைகளை சேக ரித்துச் செல்வார்கள்.
அம்மன் குளம், சின்னத் தெப்பக்குளம், பெரிய தெப்பக்குளம் ஆகிய மூன்று குளங்கள்தான் திருச்செங் கோட்டின் நீர் ஆதாரமாக இருந்தன. இன்று, அம்மன் குளம் பேருந்து நிலையம் ஆகிவிட்டது. சின்ன தெப்பக் குளம் வணிக வளாகம் ஆகிவிட்டது. பெரிய தெப்பக் குளம் உருக்குலைந்துவிட்டது. திருச்செங்கோடு மலை யின் கிழக்குப் பகுதியில் மலார் குட்டை என்ற நீர்நிலை இருக்கிறது. மக்கள் மலையேறிச் சென்று தண்ணீர் பிடித்து வருவார்கள். இந்தத் தண்ணீர் சிறுவாணித் தண்ணீரைவிட சுவையானது.
ஊரின் மிகப் பெரிய விழா, வைகாசி விசாகத் திருவிழா. மொத்தம் 14 நாட்கள் ஊர் களை கட்டும். சுற்று வட்டாரக் கிராமங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் குவிந்துவிடுவார்கள். அந்த நாட்களில் திருச்செங்கோட்டின் அனைத்து வீடுகளிலும் புட்டும் கூட்டாஞ்சோறும் கமகமக்கும். வழிப்போக்கர்கள் ஆரம்பித்து விருந்தினர் வரை, யார் சென்றாலும் புட்டு சாப்பிடலாம்.
ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தில் திருச்செங்கோடு இருந்தபோது சுற்றுவட்டார மாவட்டங்களில் எங்குமே அச்சகம் கிடையாது. நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பே முதல்முறை யாக இங்குதான் சுப்ராய கவுண்டர் பிரஸ் தொடங்கப்பட்டது. தி.அ.முத்துசாமி கோனார் என்கிற முதுபெரும் தமிழ் அறிஞர் அந்த அச்ச கத்தின் மூலம் பல இலக்கிய நூல்களை வெளியிட்டு உள்ளார். 19-ம் நூற்றாண்டிலேயே திருச்செங்கோட்டில் அவர், 'விவேக திவாகரன்’ என்ற பத்திரிகையையும் நடத்தினார்.
இந்திய விடுதலைக்கு முன்பு சென்னை மாகாணத்தின் முதல் அமைச்சராகப் பதவி வகித்த டாக்டர் சுப்ராயன், எங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் குமாரமங்கலத்தைச் சேர்ந்த ஜமீன்தார். அவருக்குப் பிறகு அரசியலில் தூய் மையைக் கடைப்பிடித்த மோகன் குமார மங்கலம், ரங்கராஜன் குமாரமங்கலம் ஆகி யோரும் இம் மண்ணின் மைந்தர்களே!
வரலாற்றுச் சிறப்பையும், நவீன வளர்ச்சியையும், ஒரு சேரப் பெற்றிருக்கும் திருச்செங் கோடு, நான் புரண்டு விளையாடிய மண். என் உயிரோடு கலந்து இருக்கும் ஊர். அதனால்தான் என் படைப்புகளின் களம் திருச்செங்கோட்டைத் தாண்டுவதே இல்லை!''
எழுதியது பெருமாள் முருகன்