Sunday, August 16, 2015

6 நிமிட குறும்படத்தில் சுதந்திரத்தின் மகத்துவம் - போலிப்பெருமிதம் ??

இரு நாட்களுக்கு முன்பு தமிழ் இந்துவில் "6 நிமிட குறும்படத்தில் சுதந்திரத்தின் மகத்துவம்" என்ற தலைப்பிட்ட ஒரு காணொளிப்பதிவைக் கண்டேன். அதிலே 'நம் இதயத்துக்கு பக்கத்தில்'. ஆனால், என்றாவது யோசித்திருக்கிறோமா, சுதந்திரம் கிடைக்காமலே போயிருந்தால் என்னவாகியிருக்கும். இன்னமும் ஆங்கிலேயரிடமே கட்டுண்டு இருந்திருந்தால் நிலைமை என்னவாக இருந்திருக்கும் என்று?" என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனால் ஈர்க்கப்பட்டு அதைப்பார்த்தேன்.

ஓர் இரவில், இருசக்கர வாகனத்தில் கணவருடன் பயணத்துக் கொண்டிருக்கிறாள் ஒரு பெண். திடீரென  ஒரு விபத்து ஏற்படுகிறது. அருகே இருக்கும் நட்சத்திர ஓட்டலுக்குள் மனைவியை தூக்கிக் கொண்டு செல்கிறார் அந்தக் கணவர். அங்கே உணவு அருந்திக்கொண்டு இருந்த பிரிட்டஷ் மேல்வர்கத்தினர் அவர்களை காட்டுமிராண்டித்தனமாக நடத்தி வெளியே தூக்கி எறிகின்றனர். அங்கே ஒரு பலகையில் "DOGS AND INDIANS NOT ALLOWED" என்று எழுதி வைக்கப்பட்டுள்ளது. பிற்பாடு, சுதந்திரம் பெற்ற இந்தியாவில் அவர்கள் உண்ணுவதற்கு அதே  நட்சத்திர ஓட்டலுக்கு செல்லும் போது அவர்கள் அன்புடன் மிகவும் மரியாதையாக நடத்தப்படுவதாக முடிகிறது. இதை முதலில் பார்த்தவுடன் நானும் அப்படியே மெய்சிலிர்த்து என் தேசத்தில் சுதந்திரத்தின் மதிப்பை உணர்ந்தவனாய் பெருமைப் பட்டுக்கொண்டேன்.

இதுப் போலிப் பெருமிதம் அல்லவா? இதே சுதந்திர நாட்டில் ஒரு பெரிய நட்சத்திர உணவு விடுதியில் ஒரு ஏழைக்கு இந்த மரியாதை கிடைக்குமா? விபத்தில் காயம் பட்ட  ஒரு சாமானிய மனிதனுக்கும் ஓடோடி வந்து உதவுவார்களா?

நாம் ஏன் உண்மைகளை மறந்தோ அல்லது மறைத்தோ போலிப்பெருமிதங்களைத் தேடிக்கொள்கிறோம். வரலாற்றின் பாதையில் பயணித்து அறிய யாருக்கும் ஆர்வமில்லை. யாரவது இப்படி ஒரு வீடியோவை எடுத்தால் அப்படியே சிலாகித்துவிட்டு ஒரு லைக் போட்டுவிட்டு ஒரு ஷேர் செய்துவிட்டு கடந்து போவதோடு கடமை முடிந்து விடுகிறது. 

No comments: