வேப்பம்பூ மிதக்கும்
எங்கள் வீட்டுக் கிணற்றில்
தூர் வாரும் உற்சவம்
வருடத்திற்கொருமுறை
விசேஷமாய நடக்கும்
ஆழ்நீருக்குள்
அப்பா முங்க முங்க
அதிசயங்கள் மேலே வரும்
கொட்டாங்கச்சி, கோலி, கரண்டி
கட்டையோடு உள் விழுந்த
துருப்பிடித்த ராட்டினம்
வேலைக்காரி திருடியதாய்
சந்தேகப்பட்ட வெள்ளி டம்ளர்
சேற்றிற்குள் கிளறி
எடுப்போம் நிறையவே
சேறுடா சேறுடாவென
அம்மா அதட்டுவாள் என்றாலும்
சந்தோஷம் கலைக்க
யாருக்கு மனம் வரும்?
பகை வென்ற வீரனாய்
தலை நீர் சொட்டச் சொட்ட
அப்பா மேலே வருவார்
இன்றுவரை அம்மா
கதவுகளின் பின்னிருந்துதான்
அப்பாவோடு பேசுகிறாள்
கடைசிவரை அப்பாவும்
மறந்தே போனார்
மனசுக்குள் தூரெடுக்க
- நா முத்துக் குமார் - பட்டாம்பூச்சி விற்பவன்
2 comments:
tat was on mi curriculum in loyola
இன்னும் கொஞ்சம் நுட்பமாக இருந்திருகவெண்டும். .....ம் பரவாயெல்லை. சினிமாக்காரர் அல்லவா? கமர்சியல்.
Post a Comment