Friday, December 25, 2009

பசித்த மழை - எஸ். ராமகிருஷ்ணன்

இருபத்தி எட்டாவது வயதில் சென்னையில் தங்குமிடமின்றி அலைந்து கொண்டிருந்த போது ஒரு நண்பனோடு மேன்ஷன் அறையொன்றில் தங்கி இருந்தேன். மிகச்சிறிய அறை. பகலில் கூட வெளிச்சம் வராது. அறையின் ஜன்னல் சாலையை நோக்கியது. அதிலிருந்து புழுதி பெருகி அறைக்குள் நிரம்பிவிடுகிறது என்று சாத்தியே வைத்திருப்பான். நானோ அந்த ஜன்னலை திறந்துவிட்டு வெளியே பார்த்தபடியே இருப்பேன். இரவிற்குள் என்சுவாச கோளங்களில் தெருப்புழுதியேறி நானே நிறம் மாறியிருப்பேன். ஆனாலும் ஜன்னலை சாத்த மனது வராது. கடந்து செல்லும் காட்சிகளை பார்த்தபடியே நின்றிருப்பேன்.






திருவல்லிகேணி சாலைகளில் பகலிரவாக இயக்கம் ஒய்வதேயில்லை. மிககுறுகலான சந்துகள், கூட்டு குடித்தனங்கள், நூறுவருச பழமையான கம்பிஅழி போட்ட வீடுகள், சிறியதும் பெரியதுமான கோவில்கள், ஒதுங்கி தன்னை மறைத்துக் கொண்ட பள்ளிக்கூடம், கழிந்தபடி நடக்கும் மாடுகள், எண்ணிக்கையற்ற தெருநாய்கள், பூனைகள், வீசி எறியப்பட்ட கழிவுகாய்றிகள், பழக்குப்பைகள், பிளாட்பாரத்தில் உறங்கும் மனிதர்கள், எச்சில்படிந்து போன மின்சார சேமிப்பு கலன்கள், அதன் பின்னால் பகலெல்லாம் மூத்திரம் போனபடியிப்பவர்கள்.





மசூதி வாசலில் காத்திருக்கும் பிச்சைகாரர்கள், சக்கரவண்டியில் அலையும் முடநோயாளி. ஈக்கள் நிரம்பிய பிரியாணிகடைகள், பனியன், செருப்பு,பிளாஸ்டிக் பொம்மை விற்கும் கடைகள், வாகனங்களை பொருட்படுத்தாமல் கடந்து செல்லும் தேநீர்கடை சிறுவர்கள், துப்பாக்கி ஏந்தியபடியே சாலையை வெறித்து நிற்கும் துருப்பிடித்த கான்ஸ்டபிள், ஒயின்ஷாப் முன் யாசகம் கேட்கும் பெருங்குடியன்,





ஒண்டுகுடித்தனத்தில் வாழும் அழகான இளம்பெண்கள், அவர்களை வெறித்து பார்த்தபடியே உதடுகளை சுவைக்கும் மேன்ஷன் பிரம்மசாரிகள். கந்துவட்டிக்கார சேட்டுகள், சிஏ படிக்க வந்த பெங்காலிகள், ஒரிசாகாரர்கள், கம்ப்யூட்டர் கற்கவந்த பீகாரிகள் .மெஸ்ஸில் வேலை செய்யும் ஆந்திராகாரர்கள். மலையாளி டீக்கடைகள், ஜவுளிகடை குஜராத்திகள், குடைவணிகம் செய்யும் காபூல்வாசி, வெற்றலை விற்கும் பழைய பர்மாகாரர்கள், மங்களுர் பேக்கரிகள், இவர்களுடன் கலந்துவிட்ட வெளிநாட்டுபயணிகள், மனிதர்களை அள்ளிக்கொண்டு வரும் நகர பேருந்து, சைக்கிள் ரிக்ஷா, ஆட்டோ, தள்ளுவண்டி, பைக், மீன்வண்டி என்று கலவையான இரைச்சல் ஒயாத உலகமது. கொதிப்பேறிய உலைப்பானை போன்றது.





இத்தனை மனிதர்களை இயங்க செய்யும் ஒரே விசை பசி மட்டுமே. அது தான் மனிதனை வீட்டிலிருந்து வெளியே துரத்துகிறது. வேலை செய்ய வைக்கிறது. சேமிக்கவும், பகிர்ந்து தரவும் ஒளித்து வைக்கவும் கற்றுதருகிறது.

பசி அடங்குவதேயில்லை. நாம் அதை தணிக்கிறோம். ஒடுங்கி கொள்கிறது. பின் சில மணி நேரங்களில் மீண்டும் பசி. அதை தணிக்க உடனடி நடவடிக்கைகள், ஒன்று சோற்றால் பசியை வெல்ல வேண்டும். அல்லது பசி சோற்றை வெல்ல வேண்டும் என்ற தேவதச்சன் கவிதை வரி தான் நினைவிற்கு வருகிறது. ஆனால் இரண்டுமே தற்காலிக சாத்தியங்களே.





அந்த நாட்களில் பெரும்பான்மை மேன்ஷன்வாசிகளை போல நானும் காலை உணவை தவிர்ப்பதற்கு பழகியிருந்தேன். வேலை தேடி அறையில் தங்கியிருப்பவர்கள் பலரும் காலையில் சாப்பிடுவதில்லை. தூங்கி எழுந்தவுடன் சென்னை நாகரீகமான பட்டர்பிஸ்கட் சாயா குடித்து விட்டு பசியை வளர்க்க துவங்குவார்கள். பெரும்பான்மையான மெஸ் காலையில் திறப்பதில்லை. மதிய உணவிலிருந்தே ஆரம்பமாகின்றன. மதிய உணவு பனிரெண்டரை மணிக்கு தயராகிவிடும். ஆகவே அந்த ஒருவேளை மட்டும் அன்லிமிடெட் சாப்பாட்டிற்காக காத்திருப்பார்கள்.





காலையில் குளித்து ரெடியாகிவிட்டால் பசியை தாங்க முடியாது. அதே நேரம் காலையில் குளிக்காவிட்டால் மேன்ஷனில் தண்ணீர் கிடைக்காது. இந்த ஊசலாட்டம் காரணமாக குளித்து தயாராகி இரண்டு மணி நேரம் அறையில் ஒடும் மின்சார விசிறியை வெறித்து பார்த்தபடியோ, அல்லது காலையில் படித்த நாளிதழை வரிவிடாமல் மறுபடி படித்தபடியோ நேரத்தை கொன்றாக வேண்டும்.





பனிரெண்டரை மணி அளவில் ஆந்திரா மெஸ் திறந்துவிடும். சூடு பொறுக்கமுடியாத சாதம், பருப்பு, அப்பளம் பொறியல் என்று பசியோடு யுத்தம் துவங்கிவிடும். அது தான் நாளின் பிரதான வேலை. அதன்பிறகு இரவு எப்போது எங்கே சாப்பிடுவது என்பது அன்றாடம் நடக்கும் அற்புதம்.

ஆனால் ஏதாவது ஒரு காரணத்தால் மதிய உணவை இழந்துவிடுகின்றவன். இரவு அதே மெஸ் சாப்பாட்டிற்காக வெறியோடு காத்திருப்பான். அப்போது அவன் முன்னே கடவுளே வந்து நின்றாலும் போய்யா மசிரு என்று தான் கத்துவான்.





சென்னையில் ஆயிரம் மேன்ஷன்களுக்கு மேல் இருக்ககூடும். உண்மையில் ஒவ்வொரு மேன்ஷனும் ஒரு கடவுளாலே நிர்வகிப்படுகிறது. அவர் ஒரு சர்வ வல்லமை கொண்டவர் எந்த அறையில் எப்போது என்ன நடந்தாலும் இருந்த இடத்திலிருந்தே அவருக்கு தெரிந்துவிடும். அத்துடன் அவர் எப்போது தோன்றுவார். எப்போது மறைந்து போவார் என்று யாருக்குமே தெரியாது.



அவரது முகம் இரும்பும் கருங்கல்லும் இணைந்து பெற்ற குழந்தை போன்ற விநோத உலோகம் ஒன்றால் செய்யப்பட்டது போலிருக்கும். படியில் நடந்து வரும் சப்தத்தை வைத்தே யார் அது என்று சொல்லிவிடக்கூடிய விற்பன்னர்.

மின்சாரத்தை துண்டிப்பது, தண்ணீரை நிறுத்தி வைப்பது. ஏகவசனத்தில் திட்டுவது போன்ற திருவிளையாடல்கள் அவரிடம் உண்டு. அவரது ஒரே பலவீனம் ஒசியில் குடிப்பது. அதை பயன்படுத்தி கடவுளின் அனுக்கிரகம் பெற்றவர்கள் அங்கு பிரச்சனையில்லாமல் காலம் தள்ளமுடியும். சில நூறு மனிதர்களை கட்டிகாத்துவரும் அந்த குறுங்கடவுளின் கையில்தான் மேன்ஷன் இயங்கிக் கொண்டிருந்தது.





விதி தன்னை குப்புற தள்ளியதோடு முதுகில் ஏறி உட்கார்ந்து விளையாடியது என்று புதுமைபித்தன எழுதியிருப்பார். அது மேன்ஷன்வாசிகள் விஷயத்தில் அடிக்கடி நடக்கும் விளையாட்டு.





பசியோடு மெஸ் திறக்கும் நேரத்திற்காக காத்திருந்த ஒரு நாளில் மேன்ஷன் கடவுள் அறைக்கு ஒரு போன் வந்தது. அக்கறையுள்ள ஒரு நண்பன் தன் வீட்டிற்கு உடனே புறப்பட்டு வரும்படி என்னை அழைத்திருந்தான். எப்படியும் ராமாபுரம் போய் சேர ஒரு மணி நேரமாகிவிடும். பசியை பொறுத்துக் கொண்டு பயணம் செய்ய துவங்கினேன்.





பேருந்தில் என்னை போலவே பசியோடு இருப்பவர்கள் பலர் இருந்தார்கள் என்பது கண்களை பார்த்த மாத்திரம் தெரிந்துவிட்டது. பசியை கண்கள் ஒரு போதும் மறைப்பதேயில்லை. அது காட்டி கொடுத்துவிடுகிறது.





பேருந்தை விட்டு இறங்கி நடந்து நண்பன் அறைக்கு போன போது சமையல் அப்போது தான் துவங்கியிருந்தது. தக்காளியும் வெங்காயும் வெட்டிக் கொண்டிருந்தார்கள். கோழிக்கறி துண்டு போடப்பட்டு கொண்டிருந்தது.

அந்த அறையில் ஆறு பேர் தங்கியிருந்தார்கள். அவர்களில் நாலு பேருக்கு அன்று ஒய்வு நாள் . அதனால் அசைவம் சமைப்பது என்று முடிவு செய்து நண்பர்களை அழைத்திருக்கிறார்கள். ஒரு தக்காளியை மட்டுமாவது சாப்பிடக்கொடுங்கள் என்று எப்படி கேட்க முடியும். வெறியோடு தக்காளியை பார்த்துகொண்டிருந்தேன்.





அவர்கள் சிகரெட் பிடித்தபடியே சமைக்க ஆரம்பித்திருந்தார்கள். எப்படியும் முடிவதற்கு இன்னும் இரண்டு மணி நேரமாகும். அது வரை என்ன செய்வது என்று புரியவில்லை. அந்த அறை நண்பர்களில் ஒரு கவிஞன் இருந்தான். அவனது கவிதை ஒன்று சிறுபத்திரிக்கையில் வெளியாகி இருந்தது. அதை சில நாட்களுக்கு முன்பாகவே பார்த்திருந்தேன். ஆனால் அவனிடம் அந்த கவிதை பற்றி பேசவேயில்லை.





பசி முற்றியிருந்த நேரத்தில் அவன் தன் கவிதை வெளியான சிறுபத்திரிக்கையை எடுத்து வந்து என்முன்னே நீட்டினான். நான் மெல்லிய புன்னகையுடன் பார்த்துட்டேன் என்றேன். அவன் புதிதாக ஒரு சிகரெட்டை பற்ற வைத்தபடியே எப்படியிருக்கு என்று கேட்டான்.





ஏன்டா கவிதையை பற்றி கேட்பதற்கான நேரமா இது என்று ஆத்திரமாக வந்தது. ஆனால் அதை காட்டிக் கொள்ள கூடாது என்ற எண்ணத்தில் ஒகே என்றேன். அவன் புகையை இழுத்துவிட்டபடியே அது எனக்கு தெரியும். கவிதையோட லாங்குவேஜ் எப்படியிருக்கு என்று கேட்டான். எனக்கோ சமையல் அறையில் இருந்து கசியும் குழம்புவாடை பசியை தூண்டிக் கொண்டிருந்தது.





அவன் கவிதையில் மொழி இன்னமும் மேம்பட்டிருக்க வேண்டும் என்று சொன்னேன். எப்படி என்று கேட்டான். சில சொற்கள் மிகவும் தட்டையாக இருப்பதாக சொன்னேன். அவன் மறுத்து பேச ஆரம்பித்தான். இந்த விவாத்தில் அறை நண்பர்களில் இன்னொருவன் சேர்ந்துவிட்டான். அவர்கள் இருவரும் எனது அபிப்ராயங்களை கடுமையாக தாக்க துவங்கினார்கள்.





பசியோடு ஆத்திரமும் சேர்ந்து கொள்ள நானும் கடுமையாக தாங்க ஆரம்பித்தேன். நீ யாருடா என் கவிதைய பற்றி பேசுறதுக்கு மயிராண்டி. உன்னாலே கவிதை எழுத முடியுமாடா என்று ஏகவசனத்தில் கத்தினான். நானும் அவனை கடுமையாக திட்டினேன். சமைத்து கொண்டிருந்த நண்பன் என்னை தனியே அழைத்து கொஞ்ச நேரம் வெளியே போயிட்டு கழித்துவா அவர்களை சமாதானப்படுத்திவிடுகிறேன் என்றான்.





அறையை விட்டு வெளியே வந்தேன். வெயில் உக்கிரமாக இருந்தது. அதை அள்ளி குடிக்க வேண்டும் போலிருந்தது. தெருவில் இருந்த மரங்கள், மின்சார கம்பங்கள், வீடுகளின் இரும்புகேட்டுகள், ஒயர்கள் அத்தனையும் பிடித்து இழுத்து கடித்து மெல்ல வேண்டும் போலிருந்தது. என்னை சுற்றி சாப்பிட முடியாத பொருட்கள் எவ்வளவு இருக்கின்றன என்று அன்று தான் கண்டுகொண்டேன்.மணி மூன்றரை இருக்க கூடும். நடந்து பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள உணவகம் ஒன்றிற்கு போன போது சாப்பாடு முடிந்துவிட்டது வேண்டுமானல் பரோட்டா இருக்கிறது என்றார்கள். இன்னொரு கடையை தேடி போக முடியாது என்ற எரிச்சலில் தலை கவிழ்ந்திருந்தேன்.





ஒரு மனிதனுக்கு தரப்படும் மிகக் கொடுமையான தண்டனை மதியவேளைகளில் அவனை பரோட்டா சாப்பிட வைப்பது மட்டுமே என்று நினைப்பவன் நான். அன்று அந்த தண்டனையை எனக்குநானே கொடுத்து கொண்டேன்.





வயிற்றுக்குள் இருந்து கூடுதலாக நாலைந்து கைகள் வெளியே வந்து பரோட்டாவை பிய்த்து தின்பது போன்றிருந்தது அன்று நான் சாப்பிட்ட வேகம். தண்ணீரை குடித்துமுடித்துவிட்ட பிறகு இனிமேல் அந்த அறைக்கு ஏன் போக வேண்டும் என்றிருந்தது. பேருந்து நிறுத்தம் அருகிலே நின்றிருந்தேன்..

வேண்டும் என்றே ஒவ்வொரு பேருந்தாக தவறவிட்டபடியே நின்று கொண்டிருந்தேன். அது ஆனந்தமாக இருந்தது. பசியை நான் ஜெயித்துவிட்டேன். இனி என்ன கவலை என்று விசில் அடிக்க வேண்டும் போலிருந்தது





பேருந்து நிறுத்தம் எதிரில் ஒட்டப்பட்டிந்த சினிமா போஸ்டரில் இருந்த நடிகை என்னை பார்த்தபடியே இருந்தாள். அந்த நிமிசம் அவளை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. என் எதிரே நிற்பவள் போல அவளோடு பேச துவங்கினேன். பிறகு அது ஒரு அபத்தம் என்று நானே மௌனமாகி கொண்டேன் .





ஐந்து மணி அளவில் ஒரு பேருந்தை பிடித்து கடற்கரைக்கு வந்து சேர்ந்த போது மழை வருவது போல இருட்டிக் கொண்டிருந்தது. பொதுவாக மாலை நேரங்களில் பெய்யும் மழை சில நிமிசங்களுக்கு மேல் நீடிப்பதில்லை. அது எட்டிப்பார்க்கும் மழை போன்றது. சிறுவர்கள் மூத்திரம் பெய்வது போன்ற அவசரம் கொண்டது.





அன்றும் ஒரு சில நிமிசங்கள் மழை பெய்து அடங்கியது. மழைக்கு பிறகான நசநசப்புடன் அறைக்கு திரும்பிவந்திருந்தேன். அறையில் மின்சாரமில்லை. பரோட்டா வயிற்றிற்குள் தன் கலகத்தை துவங்கியிருந்தது.





மாலை வடிந்து இரவாகிக் கொண்டிருந்தது. தெரு விளக்குகள் எரிய துவங்கின. அறையிலோ மின்சாரமில்லை. அருகாமையில் பழுது நீக்கம் நடக்கிறது என்றார்கள். மொட்டைமாடிக்கு போய் நின்று கொண்டேன். மிகவும் உயரத்திலிருந்து பார்க்கும் சென்னை எப்போதுமே விசித்திரமான அழகோடிருக்கிறது. மங்கிய வெளிச்சம் படர்ந்திருந்திருக்க நகரம் ஒய்வை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது.





அருகா�மை மாடி ஒன்றில் ஒருவன் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தான். தூரத்தில் ஒரு பெண் காய வைத்த சேலையை மடித்து எடுத்து கொண்டிருந்தாள். ஒரு முதியவர் மாடியில் வாக்கிங்போய்க் கொண்டிருந்தார். அவர்களையே பார்த்து கொண்டிருந்தேன். ஒவ்வொருவருக்கும் ஒரு வேலையிருக்கிறது என்பது எவ்வளவு பெரிய விஷயம். இந்த வேலைகள் இல்லாவிட்டால் இவர்கள் என்ன செய்வார்கள். நினைக்கவே பயமாக இருந்தது.

அரை மணி நேரம் நின்றிருப்பேன். வானம் திரும்பவும் இருண்டு கொண்டு வரத்துவங்கியது. வானில் நட்சத்திரங்களே இல்லை. வேகமான காற்றும் சேர்ந்து அடிக்க துவங்கியது. காற்றெங்கும் குளிர்ச்சி. மழை பெய்ய போகிறது என்று உறுதியாக தெரிந்தது. அதை வெளிப்படுத்துவது போல காற்று ஒலமிட்டது அருகாமை மரங்கள் மூர்க்கம் கொண்டது போல அசைந்தன.





விசிறி நடக்கும் மனிதனை போல பெரிய பெரிய எட்டுகள் எடுத்து வைத்து வந்து சேர்ந்தது மழை. மொட்டை மாடியை விட்டு இறங்கி கிழே சென்றேன்.

எல்லா அறைகளிலும் இருட்டிலே இருந்தன. படிப்பாளிகள் சிலர் மட்டும் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் சிரத்தையாக படித்து கொண்டிருந்தார்கள். மின்சாரம் இல்லாத நேரத்தில் எதற்காக உடையணிய வேண்டும் என்று நினைத்த சக அறைவாசிகளில் ஒருவன் நிர்வாணமாக குளியல் அறையை நோக்கி நடந்து போய்க் கொண்டிருந்தான்.





என் அறைக்கு வந்து ஜன்னலை திறந்துவிட்டேன். வெளியல் உள்ள வெளிச்சமும் மழை சீற்றமும் அறைக்குள் வர துவங்கியது. ஆனாலும் ஜன்னலை மூடிவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். எனது அறை நண்பன் இன்னமும் வரவில்லை. அவன் மழையால் தாமதமாக வரக்கூடும் என்று நினைத்தேன்.





வலுவான மழை. யார்மீதோ தீராத கோபம் கொண்டது போல ஆவேசமான மழை. அது நகரெங்கும் தன் கைகளால் தட்டி அலைகிறது. காற்றும் துணைக்கு சேர்ந்து கொண்டதால் நொய்ந்த பொருட்களை, விளம்பர பலகைகளை துணிபடுத்தாக்களை அவை பிய்த்து வீசுகின்றன.





சாலையை மறித்தபடியே ரௌடிகள் கத்தியோடு வெறி கொண்டு கத்துவது போன்று மழை அனைவரையும் மிரட்டிக் கொண்டிருந்தது. மழைக்குள்ளாக பலரும் ஒடிக் கொண்டிருந்தார்கள். குடையோடு ஒரு மனிதன் சாலையில் இறங்கி நடக்க துவங்கினான்.





அவனிடமிருந்து குடையை பறித்து வீசியது காற்று. குனிந்து எடுப்பதற்குள் முதுகில் அடித்தது மழை. காற்றும் மழையும் சேர்ந்து கொண்டு அவனை புரட்டி எடுத்தன. அவன் குடையை மறந்து மழையிடமிருந்து தப்பியோடினான்.

எனக்கு மறுபடியும் பசிக்க ஆரம்பித்திருந்தது. மெஸ்ஸில் போய் சாப்பிடலாம் என்ற கனவை மழை கலைத்துவிடுமோ என்று யோசித்தபடியே கொஞ்ச நேரத்தில் மழை நின்று விடும் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.



ஆனால் நான் நினைத்தது தவறு என்பது போல மழை உக்கிரம் கொள்ள துவங்கி கொட்டி தள்ளியது. சாலையில் மழையை தவிர வேறு நடமாட்டமேயில்லை. மின்னல்வெட்டும் இடியும் சேர்ந்து கொண்டது. நூறாயிரம் வாள்களுடன் பூமியோடு சமர்செய்வது போன்றிருந்தது மழையின் வேகம்.





பார்த்துக் கொண்டிருந்த போதே எங்கும் மின்சாரமில்லை. ஒங்காரமிடுவது போன்ற காற்றின் பெருங்குரல். தள்ளுவண்டி ஒன்று மழைக்குள் குடை சாய்ந்தது. இறங்கி நனைந்தபடியே போய் சாப்பிட்டுவந்துவிடலாமா என்று நினைத்தேன். மின்சாரம் வரட்டும் என்று மனக்குறளி சொல்லியது. எவ்வளவு நேரம் மழையை பார்த்துக் கொண்டிருந்தேன் என்று தெரியவில்லை. அருகாமை நண்பர்கள் டிபன் வாங்கிவந்து அறையிலே சாப்பிட துவங்கியிருந்தார்கள். மழை விடவேயில்லை. அறை நண்பனும் வந்து சேரவில்லை.





மின்சாரமில்லாத வீதிகள் நகரை ஒரு நூற்றாண்டின் பின்னே இழுத்து கொண்டு போய்விட்டன. மழை இந்த நகரை காலம் காலமாக பார்த்துக் கொண்டுதானே இருக்கிறது.





எனது பசியின் கோபம் மழையின் மீதாக திரும்பியது. மழை என்னோடு சமர் செய்வது போலவே உணர்ந்தேன். மழைக்கு எதிராக எதையும் செய்ய முடியவில்லையே என்று ஆத்திரம் கொண்டேன்.





மழை ஒரு அடிப்பட்ட புலி அலைந்து கொண்டிருப்பது போல தோன்றியது. சில வேளைகளில் மழை ஒரு யுத்தம். அதன் நோக்கம் மனிதர்களை பயங்கொள்ள செய்வது மட்டுமே என்றும் தோன்றியது. ஆனால் மழையை எப்படி எதிர்கொள்வது. நனைந்தால் அதற்கு நம்மை ஒப்புக்கொடுக்கிறோம் என்று அர்த்தம். ஒதுங்கி நின்றால் அதை கண்டு பயந்துவிட்டோம் என்று அர்த்தம்.இரண்டிலும் மனது ஒப்பவில்லை. பிறகு மழையை எப்படி தான் எதிர்கொள்வது.





அன்று மழையை கடுமையாக திட்டினேன். அது என்னை பரிகாசம் செய்தது. வக்களித்தது. பின்புறத்தை அசைத்து காட்டி குதூகலித்தது. பசித்தவன் மழையை விட ஆவேசம் கொண்டவன் என்று கத்தினேன். எனது சப்தம் மழையில் நனைந்த காதிதம் போல கண்முன்னே நமுத்துபோனது.





என்னிடமிருந்த வசைகள் தீர்ந்து போயின. ஆத்திரம் அடங்கவில்லை. மழையின் உக்கிரம் பெருஞ்சீற்றமாக மாறியிருந்தது. இது தான் கடைசி யுத்தம் போலவும் இன்றிரவோடு நகரை துடைத்து எறிந்துவிடப்போவது போன்றும் அது துள்ளியது. நான் ஒடுங்கி போக ஆரம்பித்தேன்; நூற்றாண்டுகாலமாக மனிதர்கள் பயந்துவந்தது போலவே தண்ணீரை கண்டு பயந்து போனேன். மழை பெருகி வீதியில் தண்ணீர் ஒடிக்கொண்டிருந்தது. இருட்டை கரைத்துக் கொண்டும் ஒடும் தண்ணீருக்குள் செல்லும் வாகனங்களின் வெளிச்சம் விநோதமானதாக இருந்தது.





மழையின் முன்னால் தோற்றுபோய் நிற்கும் ஒருவனை போல அயர்ந்து போயிருந்தேன். நானும் நீயும் சமமானவர்கள் இல்லை. நீ உன் சகல ஆயுதங்களை கொண்டு என்னை எதிர்த்து போரிடுகிறாய். நான் பசியோடு நிராயுதபாணியாக உன்னை எதிர்கொள்கிறேன். மழையே உன் சரங்களை நிறுத்து. நானும் தயார் ஆகிக்கொள்கிறேன் என்று ஜன்னலை நோக்கி சொன்னேன். மழை என் குரலை பொருட்படுத்தவேயில்லை.





என் தோல்வியை ஒப்பு கொண்டது போல பேரமைதி கொண்டு ஒடுங்கி போனேன். எதிர்ப்பார் இல்லாத போதும் மழை தன் ஆங்காரத்தை குறைக்கவேயில்லை. நீண்டநேரம் அமைதியாக பார்த்தபடி இருந்தேன். மழை வெறும் சப்தமாக மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது.





பசி வெல்ல துவங்கியது போல என்னை அறியாமல் அறையின் ஜன்னலை மூடி கதவை சாத்திவிட்டு உணவகத்தை நோக்கி நடக்க துவங்கினேன். என்னிடம் குடையில்லை. நனைந்தபடியே தெருவில் நடந்தேன். என்னை பரிகசித்து முதுகில் அடித்து தலையை கலைத்து விரட்டியது மழை. உணவகத்தின் அருகாமை வரும்வரை நான் மழையை ஏறிட்டு காணவில்லை.

முற்றாக நனைந்திருந்தேன்.



அன்று நான் சென்ற உணவகத்தில் சாப்பாடு இல்லை. இட்லி தோசை போன்றவை மட்டுமே இருந்தது. சூடாக எதையாவது சாப்பிட்டால் போதும் என்றாகி இலையின் முன் அமர்ந்தேன். சாப்பிட்டு முடித்துவிட்டேன் என்ற உணர்வு வருகிறது. ஆனால் இதை சாப்பிட நான் ஆசைப்படவில்லை என்று உள்மனது கேலி செய்தது. அதை காட்டிக் கொள்ளாமல் வெளியே வந்தேன்.

அப்போதும் மழை விடவில்லை. ஆனால் என் உடலில் வெம்மை கூடியிருந்தது. நான் ஆயுதம் கொண்டவன் போல மழையை ஏறிட்டு பார்த்தபடியே வெளியே வந்தேன். உற்சாகத்துடன் நனைந்தபடியே அறைக்கு திரும்பிவந்தேன். உடலை துடைத்துவிட்டு மாற்றுஉடைகளுடன் பாயை போட்டு படுத்து கொண்டேன்.





வெளியே மழை விடவேயில்லை. எனக்கு உறக்கம் பிடிக்கவில்லை. மழையில் நனைந்தது உடலை புத்துணர்வு கொள்ள செய்திருந்தது. மின்சாரம் இல்லாத அறை என்பதால் பூமியின் அடியில் படுத்திருக்கிறோமோ என்ற உணர்வும் வந்தது.





மழை பின்னரவில் ஒடுங்க ஆரம்பித்தது. சப்தம் ஒய்ந்து மழை நின்ற போது தெருவிளக்குகள் எரிய துவங்கியிருந்தன. எழுந்து மேன்ஷன் வாசலுக்கு வந்து நின்றேன். சாலைகள் வெறிச்சோடியிருக்கின்றன. மழை நீர் ஒடிக்கொண்டிருக்கிறது. மழை ஈரம்கொண்ட மரங்கள் அசைவற்று நிற்கின்றன. குப்பைகள் கழிவுகாய்கறிகள் மிதந்து போகின்றன. வீடுகளில் உறக்கம் நிரம்பியிருக்கிறது. நீண்ட சாலையில் வெளிச்சம் மட்டுமே இருக்கிறது.யுத்தம் முடிந்த பேரமைதி.





அதை காணும் போது பூமியில் சுற்றி மழை தன் பசியாற்றிவிட்டு போகிறதோ என்று தோன்றியது. கட்டிடங்கள், வீடுகள். வாகனங்கள் அத்தனையும் நனைந்து ஈரம்சொட்டிக் கொண்டிருந்தன. எல்லா நாட்களிலும் தான் படுத்துகிடக்கும் குப்பை தொட்டி அருகில் அன்று தண்ணீர்தேங்கியிருப்பதால் எங்கே போய்படுப்பது என்று தெரியாமல் ஒரு நாய் அங்குமிங்கும் தட்டளிந்து கொண்டிருந்தது. அந்த நாயும் என்னை போலவே மழையை திட்டியிருக்கும். எதிர்கொள்ள முடியாமல் ஒதுங்கியிருக்கும்.





மழை எப்போதும் ஆனந்தமானதில்லை. எல்லோருக்கும் விருப்பமானதுமில்லை. ஆனால் மனித விருப்பங்களுக்காக மழை ஒரு போதும் பெய்வதில்லை. பெய்வது மழையின் இயல்பு. ஏற்றுக் கொள்வதும் ஆராதிப்பதும் தூற்றுவதும் பற்றி மழை கவலை கொள்வதில்லை. மழை கற்றுதருகிறது. உலகை புரிய வைக்கிறது. மழையை எதிர்கொள்வது ஒரு கலை. அதை முழுமையாக மனிதர்கள் கற்றுக் கொள்ளவேயில்லை.

** எஸ். ராமகிருஷ்ணன் வலைபூவிலிருந்து...

1 comment:

கொமுரு said...

மிக அருமையான கட்டுரை.ராமக்ருஷ்னன் ந்ல்ல ரைட்டர்
நன்ரி
குமாரசாமி